தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடையையும் மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்கிறவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அந்தக் கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்ப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே திருப்பூர் அரிசி கடை வீதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

அதன் பேரில் மாநகர நல அதிகாரி கௌரி முறுகானத் மற்றும் உதவி ஆணையர் வினோத், சுகாதார ஆய்வாளர். ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அரிசி கடை வீதியில் உள்ள கடைவீதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது 6 கடைகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் என 6 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடை சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.