இந்தி , சமஸ்கிருதம் ஆகியவற்றை கட்டாயமாக்கும் வகையில் ஒன்றிய அரசின் மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு தமிழக அரசும் , திமுக கூட்டணி கட்சிகளும் , அதிமுக , பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மும்மொழிக் கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என ஒரு கோடி கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்க போவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மண்டலம் வாரியாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இதற்கு தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் பெரிய அளவிலான வரவேற்பு கிடைக்கவில்லை. பாஜகவினரே படிவங்களை பூர்த்தி செய்து செல்லும் நிலை தான் ஏற்பட்டது. இந்த நிலையில் திருப்பூர் மாநகர் பகுதிகளில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மும்மொழி கொள்கையில் இந்தி திணிப்பை கண்டுபிடித்தால் 99 லட்சம் பரிசு வழங்குவதாக போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் புகைப்படத்துடன் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. பாஜக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கார்த்தி ஓசை சிவா ஆகியோர் பெயர்களில் இந்த போஸ்டர்கள் ஆனது, திருப்பூர் மாநகர பகுதிகளான தென்னம்பாளையம், பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.