கோவை தொண்டாமுத்தூர் ஓணாப்பாளையம் பகுதியில் ஆடுகளை வேட்டையாட மீண்டும் உலா வந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை வடவள்ளி – தொண்டாமுத்தூர் சாலையில் அமைந்துள்ள ஓணப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெண்ணிலா (54). இவர் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் தனது தோட்டத்தில் ஆடுகளையும் மேய்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச்1 ஆம் தேதி இவரது தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று அங்கு கட்டி வைத்திருந்த 4 ஆடுகளை கடித்து கொன்றது.

இது குறித்து கோவை சரக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், வனத்துறையினர் அங்கு கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க கண்காணித்து வந்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டது. மேலும் வெண்ணிலா தனது ஆடுகளை அங்கிருத்த வீட்டு அறைக்கு அடைத்து வைத்தருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் வெண்ணிலாவின் விவசாய தோட்டத்திற்கு வந்த சிறுத்தை ஆடுகளை தேடி அழைத்துகொண்டிருந்தது.

இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மீண்டும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வீட்டின் வாசல் மற்றும் வனப்பகுதியில் வெளியேறும் எல்லை என இரண்டு இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து படம் பிடிக்க கேமராக்களும் பொருத்தப்பட்டது. ஏற்கனவே 4 ஆடுகளை வேட்டையாடிச் சென்ற சிறுத்தை மீண்டும் அதே தோட்டத்தில் உலா வந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..