திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், நொய்யல் ஆற்றல் கரையை ஒட்டி அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே இங்கு பாம்புகள் தொல்லை இருப்பதாக ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து பாம்பு பிடி வீரர்கள் தீயணைப்பு வீரர்கள் பலமுறை மாநகராட்சி அலுவலக வளாகத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர் எனினும், அவர்கள் வசம் எந்த பாம்பும் சிக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் இருக்கும் கழிவறை பகுதியில், சுமார் 7 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஊர்ந்து வந்து அங்கிருந்த எலியை கவ்வி சென்றது. இதனைப் பார்த்த ஊழியர் ஒருவர் அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார் தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதனிடையே ஊழியர்கள் அந்த பாம்பை பிடிக்க சென்ற போது அது அவர்கள் கையில் அகப்படாமல் அங்கிருந்து தப்பி சென்றது. மாநகராட்சி அலுவலகத்திற்குள் சுமார் 7 அடி நீளம் கொண்ட நாக பாம்பு சுற்றி வருவது ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.