தென்காசி ரயில் நிலையத்திலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உடையார் தெரு என்ற பகுதியில் ரயில்வே கேட் ஒன்று அமைந்துள்ளது.

திருநெல்வேலி மற்றும் மதுரை இரு மார்க்கங்களிலும் செல்லும் ரயில்கள் இந்த வழியே தான் கடக்க வேண்டும்.

இன்று பிற்பகல் 12 40 மணிக்கு தென்காசியிலிருந்து மதுரைக்கு புறப்பட்ட பராமரிப்பு ரயில் கேட் அடைக்கப்படாததால் சிறிது தூரத்திலேயே நிறுத்தப்பட்டது.

அங்கு கேட் கீப்பர் எவரும் பணியில் இல்லை என்பது தெரியவந்தது. நீண்ட நேரமாக கேட் அடைக்கப்படாததை கவனித்த அப்பகுதி வழியாக வந்த பொதுமக்கள் சிலர் ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து வேறு ஒரு பணியாளர் அனுப்பப்பட்டு அவர் மூலம் கேட்டு அடைக்கப்பட்டது அதன் பின்பே ரயில் புறப்பட்டு சென்றது . இதனால் அந்த ரயில் 20 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக புறப்பட்டு சென்றது

ஒன்றிய அரசின் ரயில்வே துறையில் அதிக வருமானம் இருக்கும் நிலையில் போதிய அளவில் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக மக்களின் உயிரை பாதுகாக்கும் வகையிலான கேட் கீப்பர் பணியிடங்களில் பணியாளர்கள் நியமிக்கப்படாதது வருத்தத்தக்கது என சமூக ஆர்வலர்கள் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்