
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள நெல்லித்துறை ஊராட்சியில் கடமான்கோம்பை,நீராடி,பரளிக்காடு,கீழ் பில்லூர்,மேல் பில்லூர், செங்கலூர்,சேத்துமடை, தோண்டை,பூச்சமரத்தூர்,சிறுகிணறு,வீரக்கல்,கோரப்பதி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன.இந்த கிராமங்கள் அனைத்தும் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளன.இங்கு ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடமான்கோம்பை பகுதியை சேர்ந்த துரை என்பவரது மகன் மணி(45) என்பவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.இவர் பில்லூர் அணைப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார்.

அப்போது,அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது சொந்த ஊரான கடமான்கோம்பைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. செல்லும் வழியில் நீராடியில் இருந்து கடமான்கோம்பை பகுதிக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாத காரணத்தால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சடலத்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்து சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே சுமார் 3 கிமீ தொலைவிற்கு டோலி கட்டி கால்நடையாகவே தூக்கிச்சென்று தகனம் செய்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவிட்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.