திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கள் விடுதலை மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி, ஏராளமான விவசாய சங்க தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தும் வகையில் மங்கை வள்ளி கும்மி குழுவினரின் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது.மாநாட்டில் புறநானூற்று பாடலில் தமிழ் புலவர் ஔவையாருக்கு தகடூர் மன்னர் அதியமான் அவர்கள் கள் விருந்து வைத்த பாடலை மேற்கோள் காட்டி வரையப்பட்ட ஓவியத்திற்கு கள் படையலிட்டு மாநாட்டை தொடங்கினர்.

விவசாய சங்க தலைவர்கள் மாநாட்டு மேடையில் கள் எங்கள் உணவு கள் எங்கள் உரிமை என்ற கோஷங்கள் முழங்க கள்ளை பருகினார்.தமிழர்களின் முதன்மையான தற்சார்பு தொழிலான பனை தொழிலில் ஈடுபடும் பனையேறிகள் மற்றும் பனை தென்னை விவசாயிகள் மீது தமிழ்நாடு காவல்துறை நடத்தும் அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கள்ளை தமிழ்நாட்டின் மதுவிலக்கு சட்டத்திலிருந்து நீக்கி, மரபு வழி உணவு பானமாக அறிவித்து கள் மீதான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் விழுப்புரம்,ராணிப்பேட்டை, செங்கல்பட்டு,தர்மபுரி,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,திருச்சி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு காவல்துறை கள் இறக்கும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கள் இயக்கத்தின் தலைவர் நல்லசாமி பேசுகையில் 1987இல் கள்ளுக்கான தடை என்பது கொள்கை முடிவு அல்ல கொள்ளை முடிவு எனவும் கலப்படத்தை கட்டுப்படுத்த முடியாததால் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் அரசியலமைப்பு சட்டத்தில் கள்ளுக்கு தடை எனக் கூறவில்லை எனவும் அரசியலமைப்பு சட்டத்தின் மீது சத்திய பிரமாணம் செய்து பதவி ஏற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சவால் விடுப்பதாகவும் கள் உடலுக்கு தீங்கானது என்பதை நிரூபித்தால் 10 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாகவும், சவாலை ஏற்று விவாதத்திற்கு வர அரசியல் கட்சி தலைவர்கள் தயாரா என கேள்வி எழுப்பினார்.

விவசாயிகளின் அறியாமையை அரசியல்வாதிகள் அறுவடை செய்து வருகிறார்கள் எனவும் மேலும் வெள்ளைப் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தாவிட்டால் இன்னும் ஒரு வருடத்திற்குள் தேங்காயின் விலை 100 ரூபாய்க்கு உயரும் அபாயம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

உடுமலைப்பேட்டையில் வருகின்ற மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ள கள் குறித்தான கருத்தரங்கத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள் எனவும் அந்த நிகழ்ச்சியிலும் பாஜக தலைவர் கள் அருந்துவதாக கூறியுள்ளார் எனவும் தெரிவித்தார்.