திருப்பூர் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தான குமார். இவர் அதே பகுதியில் தேவாத்தம்மன் கோவில் அருகில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இரவு இவரது கடைக்கு மது போதையில் வந்த சில இளைஞர்கள் சிகரெட் வாங்கி உள்ளனர். அதற்கு பணம் கேட்ட பொழுது தர மறுத்து பேக்கரியில் பணியில் இருந்த வரதராஜன் மற்றும் பிரகாஷ் என இருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் கடையில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பணம் தராமல் அந்த கும்பல் வெளியேறியது ஊழியர்கள் உடனடியாக பேக்கரியின் உரிமையாளர் சந்தான குமாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர் கடையில் ஊழியர்கள் அடிபட்டு பொருட்கள் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
இதனைத் தொடர்ந்து அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் சந்தனகுமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பேக்கரியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி விக்கி ஜெயக்குமார் என மூன்று பேரை கைது செய்தனர்.
மேலும் சம்பவத்தில் தொடர்புடைய சிலரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். சிகரெட்டுக்கு பணம் கேட்ட கடை ஊழியர்களை இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.