வேலூர் அரியூர் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு 1.30 மணி அளவில் அரியூர் அடுத்த ஏரி கொடி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது காரினுள் 3 நபர்கள் இருந்தனர்.
போலீசாரை கண்டதும் காரில் இருந்தவர்கள் இறங்கி தப்பி ஓடினர். இதனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு துரத்திச் சென்றனர். அவர்கள் போலீசாரின் கையில் சிக்காமல் தப்பினர்.
இதையடுத்து போலீசார் அங்கிருந்த காரில் சோதனை செய்தனர். காரின் பின்பகுதியில் 13 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரிய வந்தது. போலீசார் செம்மரக்கட்டையுடன் காரை பறிமுதல் செய்து அரியூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கார் யாருடையது, காரில் செம்மர கடத்தி வந்தவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள், யாருக்காக செம்மரக்கட்டை கடத்தி வந்தனர் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.