கோவை அருகே வெள்ளானைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியின் ஒன்றிய தலைவராக உள்ளார். இவர் மாடு மேய்த்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு இவர் வெள்ளானைப்பட்டி, நீலம்பூர் ரோட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அதே பகுதியில் வந்த இந்து மக்கள் கட்சியின் கோவை மாவட்ட தலைவர் மாணிக்கத்தின் – மருமகள் பிரியா, நடராஜனிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது நடராஜ் பிரியாவை திட்டியுள்ளார். இதுகுறித்து பிரியா தனது கணவர் தனஞ்செயனிடம் தகவல் தெரிவித்துள்ளார். தனஞ்செயன் ஆத்திரமடைந்து நடராஜ் வீட்டிற்கு சென்று, என் மனைவியை ஏன் திட்டினாய் என்று கேட்டு மரக்கட்டை எடுத்து தலையில் அடித்ததில் காயம் பட்ட நடராஜன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தலையில் இரண்டு தையல்கள் போடப்பட்டது.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் நடராஜன் சிகிச்சை பெற்று வருவது தெரிந்த இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மாணிக்கம், நடராஜன் மகன் கோபாலகிருஷ்ணனை வெள்ளானைப்பட்டியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். இதனை அடுத்து தனது பாதுகாப்பிற்காக நண்பர்களுடன் அங்கே சென்ற கோபாலகிருஷ்ணனிடம், மாணிக்கம் தரக்குறைவாக பேசி வம்பு இழுத்துள்ளார்.
இதனால் கோபாலகிருஷ்ணனுக்கும், மாணிக்கத்திற்கும் இடையே அடிதடி நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் தனக்கு ஏற்பட்டுள்ள மொக்கை காயத்தின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ள தகவல் தெரிந்த கோவில்பாளையம் போலீசார், மாணிக்கம் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில் இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் மாணிக்கம்- போலீசாரிடம் “நடராஜன் மகன் கோபாலகிருஷ்ணன் எனது வீட்டிற்க்கு வந்து வாக்குவாதம் செய்து அடிதடியில் ஈடுபட்டார்.
மேலும் தனது வீட்டில் இருந்த மாருதி 800 கார் கண்ணாடி, சேர், லேப்டாப், செல்போன் ஆகியவற்றை உடைத்து விட்டதாகவும். இதில் தனக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்”. இந்நிலையில் காயம் பட்ட நடராஜன் புகார் மீது மாணிக்கம் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணிக்கத்தின் மற்றொரு மருமகள் கௌசல்யா கொடுத்த புகாரின் பேரில், நடராஜ் மகன் கோபாலகிருஷ்ணன் உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்து கோவில்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், இந்து மக்கள் கட்சி கோவை மாவட்ட தலைவர் மாணிக்கம் மீது கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் 6 வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டு வெள்ளானைப்பட்டியில் அடிதடி பிரச்சனை ஏற்பட்டு இருதரப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதில் மாணிக்கத்தின் மனைவி சரஸ்வதி மற்றும் மகன் தனஞ்செயன் மீது வழக்கு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
மேலும் நடராஜன் மகன் கோபாலகிருஷ்ணன், மாணிக்கத்தின் வீட்டிற்கு உள்ளே செல்லவில்லை கைகலப்பு சம்பவம் வெளியே நடந்ததாக தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனது வீட்டில் உள்ள பொருட்களை அனைத்தையும் மாணிக்கமே உடைத்து விட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.