நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மான் வேட்டையில் ஈடுபட்ட வரை வனத்துறையினர் கைது செய்த போது கைதானவர் மோதிரத்தை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள நெடுவிளையை சேர்ந்த இசக்கிராஜ் (37) மற்றும் தேவநல்லூர் மேலூரை சேர்ந்த மணிகண்டன் (29) ஆகிய 2 பேரும் நெடுவிளை பொத்தை பகுதியில் உலவும் கடமானை பிடிக்க மாம்பழத்தில் நாட்டு வெடிகுண்டை வைத்து வீசியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அப்பகுதியில் சுற்றி திரிந்த 4 வயது ஆண் கடமான் மாம்பழத்தை சாப்பிட்ட போது, அது வெடித்தது. இதில் கடமான் முகம் சிதைந்து படுகாயம் ஏற்பட்டது.இது குறித்து தகவல் அறிந்ததும் களக்காடு வன சரகர் பிரபாகரன் தலைமையில் வனவர் மதன்குமார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கடமானை சிகிச்சைக்காக களக்காடு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் கடமான் சிகிச்சை பலனின்றி இறந்தது.
அதன் பின் கால்நடை மருத்துவர் ஜோதி விஸ்வநாத் கடமானின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். இதுகுறித்து வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து இசக்கிராஜ் மற்றும் மணிகண்டன் ஆகியோரை கைது செய்து, களக்காடு தலையணையில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.அங்கு விசாரணையின் போது மணிகண்டன் தன் கையில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி விழுங்கி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதனைதொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் களக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.