திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த குமரஞ்சேரி கிராமத்தில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ஏழரை அடி உயரத்தில் அருள்பாலித்து வரும் பாலசுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். தைப்பூச திருவிழா நாளான நேற்று அதிகளவு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து சென்ற நிலையில் இரவு உண்டியலை எடுத்து கருவறையில் வைத்து கோவிலை பூட்டி விட்டு சென்றனர். வழக்கம் போல இன்று காலை பூஜைக்காக கோவிலை திறக்க வந்த போது நுழைவாயில் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது கோவிலில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிதறி இருந்த நிலையில் கருவறை பூட்டு உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர். இதனால் உண்டியல் காணிக்கை பணம் தப்பியது. இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் கும்மிடிப்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.
மேலும் ஆலயத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம கும்பல் ஒன்று கட்டிங் இயந்திரங்களை கொண்டு பூட்டுகளை அறுக்கும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. கொள்ளையர்கள் கோவில் பூட்டினை கட்டிங் இயந்திரம் கொண்டு தீப்பொறி பறக்க அறுக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.