சாலையின் ஒரு புறத்திலிருந்து மறு புறத்திற்கு மின்னல் வேகத்தில் ஓடி சென்று வாகனங்களை வேடிக்கை பார்த்த கரடியை வாகன ஓட்டிகள் பார்த்து ரசித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி கடும் வெயில் காரணமாக வறண்டு வருகிறது. இதனையடுத்து வனவிலங்குகள் குடிநீர் மற்றும் உணவு தேடி இடம் பெயர்ந்து வருகின்றன. அப்போது மசினகுடி – தெப்பக்காடு நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றன. அவ்வாறு வன விலங்குகள் சாலையை கடக்க வருவதை வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.
இந்த நிலையில் மசினகுடியிலிருந்து தெப்பக்காடு செல்லும் சாலை அருகே இன்று கரடி ஒன்று வந்தது. சாலை ஓர வன பகுதியில் இறையை தேடி கொண்டு இருந்தது. அப்போது அந்த சாலையில் வாகனங்கள் வருவதை கண்ட கரடி திடீரென வனப்பகுதியிலிருந்து ஓடி வந்தது அப்போது ஒரு டிப்பர் லாரியும், எதிரே காரும் வந்ததால் மிக வேகமாக சாலையை கடந்த கரடி மின்னல் வேகத்தில் மறு பகுதிக்கு ஓடி சென்று வாகனங்களை வேடிக்கை பார்த்தது. அதனை வாகனத்தில் சென்றவர்கள் கண்டு ரசித்தனர்.
இதனிடையே முதுமலை பகுதியில் நிலவும் வெயிலில் தாக்கம் காரணமாக வனவிலங்குகள் அடிக்கடி நீர்நிலைகளை தேடி சாலைகளை கடக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் அச்சுறுத்தல் விதமான செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.