
பாட்டாளி மக்கள் கட்சியில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகாரத்தின் ஆணிவேர் ஆடிப்போய் இருக்கிறது. பாமக என்றால் ராமதாஸ், ராமதாஸ் என்றால் பாமக என்ற நிலை தற்போது மாறி அந்த கட்சியை, அவரது மருமகளும் கட்சியின் தலைவர் அன்புமணியின் மனைவியுமான சவுமியா சுவீகரிக்கத் தொடங்கியுள்ளதாக குமுறுகின்றனர் பாட்டாளி சொந்தங்கள்.
பாமக என்ற கட்சியை நிறுவி என்னைத் தவிர என் குடும்பத்தில் யாரும் கட்சி பதவிக்கோ, அரசியல் பதவிக்கோ வரமாட்டார்கள் என்று சத்தியம் செய்தவர் ராமதாஸ். ஆனால், அவருக்கு பிறகு அந்த கட்சியை முன்னெடுத்துச் செல்ல நம்பத்தகுந்த நபர் யாரும் அவருக்கு கிடைக்காததால், தன்னுடைய மகனான அன்புமணியையே கட்சிக்குள் கொண்டுவந்தார். அல்லது யாரையும் நம்பாமல் அன்புமணியை மட்டுமே நம்பினார் என்றும் சொல்லலாம். இப்போது அவர்தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர். வெகுகாலம் கட்சியின் தலைவராக இருந்த ஜி.கே.மணி, இப்போது ஏட்டுச் சுரக்காய் கணக்காய் கவுரவத் தலைவராக இருக்கிறார்.
ஆனால், அன்புமணியையை ஓவர் டேக் செய்யும் வகையில் இப்போது ஜெட் வேகத்தில் பறக்கத் தொடங்கியிருக்கிறார் பசுமை தாயகம் அமைப்பின் தலைவரும் அன்புமணியின் மனைவியுமான சவுமியா. நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரியில் பாமக சார்பில் முதலில் அரசாங்கம் என்பவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், உடனடியாக அந்த அறிவிப்பை திரும்பப் பெற்று பாமக சார்பில் அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடுவார் என்று அறிவித்தார் ராமதாஸ். அப்போது முதலே கட்சியில் சவுமியாவின் கை ஓங்கத் தொடங்கவிட்டது. அவர் அந்த தேர்தலில் தோற்றபின்னர், குடும்பத்தில் ஏகப்பட்ட களேபரங்கள் தொடர்ந்து நடந்துவந்தன. பாமக நிறுவனர் ராமதாஸோ நான் சொல்வதைதான் கேட்க வேண்டும், இது நான் தொடங்கிய கட்சி என்பதை குடும்பத்திலும் உரக்கச் சொல்லி வந்தார். விளைவு, ராமதாஸை ஓரங்கட்ட முயற்சிகள் நடந்தன.
சமீபத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் மகளின் மகனான முகுந்தனை இளைஞர் அணி பொறுப்புக்கு ராமதாஸ் நியமிக்க, மேடையிலேயே அன்புமணிக்கும் ராமதாஸ்க்கும் முட்டிக்கொண்டது அனைவரும் தெரிந்ததே. அதன் பின்னர், முகுந்தனை பதவி விலகச் சொல்லி சவுமியா அன்புமணிக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார். முகுந்தன் கட்சி உள்ளே வந்துவிட்டால் நம்முடைய இருப்பு குறைந்துவிடும் என்பதால் முகுந்தன் பதவி விலகியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் அவருக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.
ஒரு கட்டத்தில் இதை தாங்க முடியாத முகுந்தன், ராமதாசிடமே நேரடியாக சென்று நான் கட்சி பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக சொல்ல, வெடித்து குமறியிருக்கிறார் ராமதாஸ். பதவியில் இருந்து விலகுவதாக இருந்தால் என் மூஞ்சியிலேயே இனி முழிக்க கூடாது என்று அவர் கடுகடுக்க, முகுந்தனால் என்ன செய்வது என்று தெரியாமல் இப்போது வரை அந்த பதவியில் தொடர்ந்து வருகிறார்.
ஆனால், ராமதாஸ்க்கு வயதாகிவிட்டது அவரால் கட்சி பணிகளை முழுமையாக கவனிக்க முடியவில்லை என்று தொண்டர்கள் மத்தியியில் புகைச்சலை கிளப்பிவிட்டு, சேலம் வரை சென்று பாமக கொடியேற்றி வந்திருக்கிறார் சவுமியா அன்புமணி. சவுமியா கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது, கொடியேற்றக் கூடாது என்று ராமதாஸ் உத்தரவிட்டும் அதனை மீறும் வகையில் நடந்துகொண்டுள்ளது ராமதாஸை மிகுந்த மன வேதனைக்கு ஆளாக்கியுள்ளதாக புலம்பி வருகின்றார்கள் அய்யாவையே நம்பியிருக்கும் பாட்டாளி சொந்தங்கள்.
இந்த நேரத்தில் அப்பா பக்கம் நிற்பதா இல்லை மனைவி பக்கம் நிற்பதா என்ற குழப்பத்தில் மதில் மேல் பூனையாக இருக்கும் அன்புமணி நிலைதடுமாறிக் கொண்டிருக்கிறார் என்கிறது தைலாப்புரம் தோட்டம்.