திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது ஆனால் அந்த சொர்க்கமே இறங்கி வந்து திருமணத்தையும் நடத்தி வைப்பது போன்ற ஒரு நெகிழ்ச்சியான திருமண நிகழ்வு குறித்து ஒரு ஆதரவற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்துள்ளது.
திருப்பூர் அவிநாசி ரோடு அம்மா பாளையத்தில் செயல்பட்டு வரும் மரியாலயா மறுவாழ்வு இல்லம் 24 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என ஏராளமானோர் தங்கி படித்தும், வேலைக்கும் சென்று வருகின்றனர். இந்த இல்லத்தில் சிறு வயது முதல் ஆதரவற்ற குழந்தையாக வளர்ந்து வந்தவர் பேபி(27) இவர் வாய் பேச முடியாத காது கேட்காத மாற்றுத்திறனாளி. வாலிப பருவத்தை எட்டிய இவருக்கு திருமணம் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தையல் கற்றுக் கொண்டு சுயமாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இந்த இல்லத்திற்கு வந்த இந்திராசுந்தரம் தொண்டு நிறுவன தலைவர் இந்திரா சுந்தரத்திடம், இந்தப் பெண்ணுக்கு வரன் பார்த்து வருவதாக காப்பக நிர்வாகி தெரிவித்துள்ளார். அப்பொழுதே திருமணத்தை முடிவு செய்யுங்கள் தாய் வீட்டு சீதனம் என்னுடையது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது திருப்பூரை சேர்ந்த ரவி, காந்திமதியின் தம்பதியின் மகன் நல்ல தம்பிக்கும் மரியாலயா மறுவாழ்வு இல்லத்தின் வளர்ப்பு மகளான பேபிக்கும் திருமணமானது நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த இந்திரா சுந்தரம், மரியாலயா காப்பகத்திற்கு சென்று, மணப்பெண்ணிற்கு வாழ்த்து தெரிவித்ததுடன் தாய் வீட்டு சீதனமான பொருட்களை தானே வாங்கி கொடுப்பதாக உறுதி அளித்தார். அதன்படி சீதனப் பொருட்களான நகை துணிமணிகள் பாத்திரங்கள் பர்னிச்சர், மெத்தை, பீரோ என சுமார் 4 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை வாங்கினார். இந்த சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியானது இன்று மரியாலயா இல்லத்தில் நடந்தது. தமிழ் பாரம்பரிய முறைப்படி 11 தட்டுகளில் சீர்வரிசைகளை காப்பக குழந்தைகள் மூலம் கொண்டு வந்து வைத்தனர். சீர் வரிசைகள் வைக்கப்பட்டிருந்த மேடையில் மணமக்கள் நல்லதம்பி பேபி அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு நெற்றியில் குங்குமம் சந்தனம் வைத்து மாலை அணிவித்து மணமக்களை வாழ்த்தினார். இவர்களது திருமணம் நாளை மறுநாள் தனியார் மண்டபத்தில் நடக்க உள்ளது.

இது குறித்து இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவன இந்திரா சுந்தரம் கூறுகையில், நான் கடந்த ஆண்டு இங்கு வந்த பொழுது பேபியின் திருமணம் குறித்து என்னிடம் தெரிவித்தார்கள் அப்பொழுதே தாய் வீட்டு சீதனம் என்னுடையது என்று கூறினேன். அதன்படி இன்று மணமக்களுக்கான சீதனத்தை வழங்கியுள்ளேன். இந்த தொண்டு நிறுவனம் சார்பில் செய்யும் உதவி மற்றும் சேவைகளுக்காக யாரிடமும் நாங்கள் நன்கொடை வாங்குவதில்லை இனியும் வாங்க போவதும் இல்லை. தொடர்ந்து இது போன்ற சேவை பணிகள் மேற்கொள்வோம் என்றார்.

உங்களுக்கு காப்பக நிர்வாக இயக்குநர் சகோதரி அருள்மேரி கூறுகையில், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாக்கும் கொடுக்கக்கூடிய இல்லமாக இது இருக்கிறது. திருப்பூரில் கடந்த 24 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இது உள்ள குழந்தைகள் அனைவருமே பாதிக்கப்பட்ட குழந்தைகள் தான் அவர்களுக்கு நாங்கள் மறுவாழ்வு அளித்து வருகிறோம். இன்று எங்கள் இல்லத்தில் இருந்த காது மற்றும் வாய் பேச முடியாத பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க உள்ளோம். இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் மூலம் இந்த பெண்ணிற்கு தாய் வீட்டு சீதனம் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு பெற்றோர்கள் இல்லாத பல குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் பலர் கொண்டு நிறுவனங்கள் சார்பில் உதவிகள் கிடைக்கப்பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இல்லத்திற்கு துணையாக நிற்கும் தமிழக அரசுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.