புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் மலர் சந்தை மற்றும் ஏலக்கடை இயங்கி வருகிறது. இந்த மலர் சந்தைக்கு ஆலங்குடி கொத்தமங்கலம் கீரமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினந்தோறும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பல்வேறு வகையான பூக்களை கொண்டு வந்து அங்கு உள்ள ஏலக்கடையில் முகவர்கள் மூலம் ஏலத்தில் விடுவதும் மவர் விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற மலர் சந்தையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது மலர்களை எடை போடும் தராசுகளில் அரசு முத்திரையில்லாததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து மலர் சந்தை மற்றும் ஏல கடைகளில் அரசு முத்திரை இல்லாத ஐந்துக்கும் மேற்பட்ட தராசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

இதனை அடுத்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்புமின்றி மலர் சந்தையில் திடீர் சோதனை நடத்தி அரசு முத்திரை இல்லாத தராசுகளை எடுத்துச் சென்றதால்
ஆத்திரமடைந்த மலர் விற்பனையாளர்கள் திடீரென்று பழைய பேருந்து நிலையத்தில் ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் இது குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அரசு முத்திரையை தராசு பயன்படுத்துவார்கள் புதுப்பிக்க வேண்டும் அதை புதுப்பிக்காததால் தான் அங்குள்ள தராசுகளை பறிமுதல் செய்து சென்றதாகவும் பூ விற்பனையாளர்கள் அரசு முத்திரையை புதுப்பித்துக் கொண்டால் தராசுகள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.