தமிழ்நாடு அரசு , திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ்ட் சார்பாக 21 வது திருப்பூர் புத்தகத் திருவிழா திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள வேலன் ஹோட்டல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 23ஆம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழாவை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து தினந்தோறும் காலை பள்ளி மாணவ மாணவியர்களுக்கான அறிவு சார் நிகழ்ச்சிகள் மற்றும் மாலை நேரத்தில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகிறது. புத்தகத் திருவிழா துவங்கிய 5 நாட்களில் 10,000த்துக்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இதுவரை புத்தகத் திருவிழாவினை கண்டு களித்துள்ளனர்.
தினந்தோறும் 10க்கும் மேற்பட்ட அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் ஆயிரக்கணக்கானோர் அழைத்து வரப்படுகின்றனர். புத்தகத் திருவிழாவில் இடம் பெற்றுள்ள பல்வேறு பதிப்பகங்களின் அரங்குகளுக்கும் சென்று பார்வையிட்ட மாணவ மாணவியர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
மேலும் , தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அரங்குகளில் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் எளிமையான முறையில் கல்வி கற்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து நூலகத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் வி ஆர் தொழில்நுட்ப முறையிலான 3டி தொழில்நுட்பத்தில் வனப்பகுதிகளை பார்வையிட்டனர்.
புத்தகத் திருவிழாவில் புத்தகம் வாங்கும் மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டு இருப்பதன் காரணமாக ஏராளமானோர் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.