தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி கட்சியின் முதல் மாநாட்டில் தொண்டர்களை நேரடியாய் சந்தித்து ஆவேச உரையாற்றியதோடு இதுவரை பெரிய அளவில் எந்தவித போராட்டமோ, மக்கள் சந்திப்போ நடத்தாதது பெரும் ஏமாற்றத்தை தவெக கட்சி தொண்டர்களிடையே ஏற்படுத்தி இருந்தது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா, கிண்டி அண்ணா பல்கலைக் கழக மாணவி பாதிக்கப்பட்ட விவகாரத்தில் ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தது போன்ற நிகழ்வுகளை விஜய் செய்திருந்தாலும் மக்களிடையே அது பெரிய அளவில் கவனம் பெறவில்லை.

இந்த சூழலில்தான் த.வெ.க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கும் விஜயின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கிய சாமிக்கும் இடையேயான பிரச்சனை பொது வெளிக்கு வந்தது. ஜான் ஆரோக்கிய சாமி புஸ்ஸி ஆனந்தின் செயல்பாடுகள் பற்றி பேசிய இரண்டு ஆடியோக்கள் வெளியே கசிந்து சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆனது. முதல் ஆடியோவில். “விஜய் என்ற ஒற்றை நபருக்காகதான் வாக்குகள் வரப்போகிறது, ஆனால், விஜய்யை புஸ்ஸி ஆனந்த் மதிப்பதே இல்லை, தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்ள புஸ்ஸி ஆனந்த் விரும்புகிறார். இது கட்சிக்கு பின்னடைவாகதான் அமையும், இதே நிலை தொடர்ந்தால் 2 சதவீத வாக்குகள் கூட பெற முடியாது” என வருத்தத்துடன் பேசி இருப்பார். இரண்டாவது ஆடியோவில் “புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரி முதல்வராகும் விருப்பம் இருப்பதாகவும், சில நேரங்களில் புஸ்ஸி ஆனந்த் கட்சிக்காக பணியாற்றுவது போன்று காண்பித்துக் கொள்கிறார், சில நேரத்தில் சுயநலமாக பணியாற்றுகிறார், அதுமட்டுமின்றி கட்சியின் முக்கியமான அடுத்தகட்ட செயல்பாடு பற்றிய ரகசியங்களை புஸ்ஸி ஆனந்த் வெளிய கசிய விடுகிறார்” என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை புஸ்ஸி ஆனந்த் மீது வைத்து அந்த ஆடியோக்களில் ஜான் ஆரோக்கியசாமி பேசி இருந்தது தவெக கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக பொது மக்கள் மத்தியில் தவெகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் விஜய்யின் காதுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன்பின் புஸ்ஸி ஆனந்த் , ஜான் ஆரோக்கியசாமி இருவரையும் பனையூர் பண்ணை வீட்டிற்கு நேரில் அழைத்து விவரங்களை கேட்டுள்ளார் விஜய். அப்போது நான் பேசியது உண்மைதான் ஆனால், அந்த ஆடியோவை நான் வெளியிடவில்லை வேறு யாரோ சதி செய்து வெளியிட்டுள்ளனர் என ஜான் ஆரோக்கிய சாமி கூறி உள்ளார். மேலும் உட்கட்சியில் நிலவும் அதிருப்தியையும் , கட்சி எவ்வளவு வீக்காக உள்ளது என்பதையும் புள்ளிவிவரங்களோடு விளக்கி கூறி இருக்கிறார் ஜான். ஆனால், புஸ்ஸி ஆனந்தோ கட்சி நன்றாக வலிமையாகதான் உள்ளது யாருக்கும் அதிருப்தி இல்லை என சொல்லி இருக்கிறார் அனைத்தையும் விஜய் அமைதியாக கேட்டுக்கொண்டார். அதோடு, ஜான் பேசிய ஆடியோவை வெளியிட்டது யார் என விசாரணை நடத்தி விரைவில் கண்டறிகிறோம் என புஸ்ஸி ஆனந்த் கூறி இருக்கிறார்.

சரி உட்கட்சி பிரச்சனை இனி வெளியே போக கூடாது, அப்படி கசிந்தால் நான் அடுத்த கட்ட முடிவை எடுக்க வேண்டி வரும் என இருவரிடமும் கடுமை காட்டி இருக்கிறார். அத்துடன் பொது மக்கள் மத்தியில் இழந்த மதிப்பை சரிக்கட்டவும் தொண்டர்களை உச்சாகப்படுதவும் என்ன செய்யலாம் என இருவரிடமும் யோசனையும் கேட்டுள்ளார். ஜான் ஆரோக்கிய சாமி டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு விவகாரத்தில் மதுரை விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் அதற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டால் ஒரே நேரத்தில் திமுக, பாஜக, அதிமுக மூன்று பெரும் கட்சிகளையும் எதிர்த்து அரசியல் செய்ய முடியும் மக்கள் மத்தியிலும் செல்வாக்கு உயரும் என கூறி இருக்கிறார். ஆனால் புஸ்ஸி ஆனந்தோ டங்ஸ்டன் விவகாரத்தை நாம் கையில் எடுத்தால் ஆளும் பாஜக அரசை பகைக்க வேண்டும் அதோடு அதிமுக வையும் எதிர்த்து பேசியாக வேண்டும் அப்படி செய்தால் நம் எதிர்கால அரசியலுக்கு சிக்கலாகும் என கூறி இருக்கிறார். விஜய்க்கும் புஸ்ஸி ஆனந்த் சொல்வது சரிதான் என தோன்றியிருக்கிறது.

தற்போதைய சூழலில் ஆளும் பாஜக அரசை பகைத்து கொள்ள வேண்டாம் என்ற முடிவில் விஜய் இருப்பதால் டங்ஸ்டன் வேண்டாம். அடுத்து வேறென்ன செய்வது என கேட்க புஸ்ஸி ஆனந்த் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை கூறி, நமது முதல் மாநாட்டில் கூட அதுபற்றி தீர்மானம் போட்டுள்ளோம் என நினைவுபடுத்தி உள்ளார். அந்த போராட்டத்திற்கு ஆதரவளித்து அவர்களை சந்தித்து தாங்கள் பேசலாம் அதோடு பத்திரிகையாளர் சந்திப்பையும் அங்கேயே நடந்ததலாம் அது நமக்கு நல்ல பெயரை கொடுக்கும் என யோசனை கூறி இருக்கிறார். அதில் பத்திரிகையாளர் சந்திப்பில் மட்டும் விஜய்க்கு உடன்பாடில்லை மற்ற ஏற்பாடுகளை செய்யுங்கள் என கூறி இருக்கிறார் விஜய் என்று தவெக விற்கு நெருக்கமான அரசியல் விமர்சகர் தெரிவித்தார்.

மக்கள் போராட்டங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைக்கும் மற்ற அரசியல் கட்சிகளைப் போலவே விஜயும் நடந்து கொள்கிறாரே என்ற முனுமுனுப்பும் எழுந்துள்ளதாம்.