நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள காவல்கிணற்றை சேர்ந்தவர் சரவணன். இவர் ஊர் ஊராக சென்று பழைய நோட்டுப் புத்தகம், இரும்பு சாமான்கள் வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இதேபோன்று சரவணன் இன்று காலையில் வடக்கன்குளம் பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளிடம் பழைய நோட்டு புத்தகங்கள், இரும்பு சாமான்கள் வாங்கியுள்ளார். அதனை தனது கடைக்கு வந்து தரம் வாரியாக பிரித்தபோது ஒரு வீட்டில் வாங்கிய பழைய நோட்டு புத்தகங்களுக்கு இடையே ஆதார் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், வங்கி சம்பந்தப்பட்ட கடிதங்கள் என நூற்றுக்கு மேற்பட்ட ஆவணங்கள் இருப்பது தெரியவந்தது. இந்த ஆவணங்கள் தபால் மூலம் வந்ததை தபால்காரர் சம்பந்தப்பட்ட பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படாமல் மொத்தமாக பழைய பேப்பர் கடைக்கு கொடுத்தது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆவரைகுளம் பகுதி மக்களுக்கு கொடுப்பதற்காக தபால் மூலம் வந்த ஏறக்குறைய 153 அசல் ஆதார்கார்டு அடையாள அட்டைகள், 13 வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் பல்வேறு வங்கிகளில் இருந்து வந்த கடிதங்கள் என பல மாதங்களாக ஆவரைகுளம் மக்களுக்கு கொடுக்காமல் சம்மந்தபட்ட ஆவரைகுளம் தபால்காரர் குப்பை தொட்டியில் வீசுவது போல் ஆக்கர் கடையில் கொண்டு தட்டிய அவலம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சரவணன் அங்குள்ள வருவாய்த் துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்து அவர்களிடம் இந்த ஆவணங்களை கொடுத்துள்ளார்.