உயிரை பறித்த தனியார் வங்கி நிர்வாகம், உயிரிழந்த இளைஞர், பெற்றோர் கதறல்,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை என்ற கிராமத்தில் தனியார் வங்கியின் கெடுபிடியால் 19 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் அருகே வைகை வடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா (55) இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் முத்துச்சாமி (22), முத்துக்காளை (19), சண்முகவள்ளி( 16) நாகஜோதி (14) என்ற குழந்தைகளும் உள்ளனர். கட்டட கூலி தொழிலாளியான சுப்பையா, வடகரையில் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட தொடங்கினார். பணம் பற்றாக்குறை காரணமாக ஆதித்யா பிர்லா குரூப்பைச் சேர்ந்த உட்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் கடந்த 2016ல் நான்கு லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அடமானமாக வீட்டுப்பத்திரத்தை ஒப்படைத்துள்ளார். மாதம்தோறும் 10 ஆயிரத்து 67 ரூபாய் வீதம் கடன் தொகை கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கடனை திரும்ப செலுத்தி வந்துள்ளார். மூன்று ஆண்டுகளில் ஆறு லட்ச ரூபாய் வரை கடன் திரும்ப செலுத்தியுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடன் தவணை செலுத்த வில்லை. இந்நிலையில் வட்டியுடன் மூன்று லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என கடந்த 14ம் தேதி தனியார் வங்கி அதிகாரிகள் வசூலிக்க வந்துள்ளனர். உடனே பணம் கிடைக்காததால் 15 நாட்கள் காலக்கெடு கேட்டுள்ளனர் . ஆனால் தனியார் வங்கி ஊழியர்கள் உடனே பணம் செலுத்த வேண்டும் என கூறி பணம் செலுத்ததால் வீட்டில் இருந்தவர்களை வெளியேற்றி விட்டு வீட்டை பூட்டி சாவியை எடுத்து சென்று விட்டனர். இதனையடுத்து அனைவரும் அருகில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கியுள்ளனர். இந்த தகவல் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுப்பையாவின் 2வது மகன் முத்துக்காளைக்கு அவர்களது உறவினர்கள் போன் மூலம் தகவல் சொல்லியுள்ளனர். இதனையடுத்து ஊருக்கு வந்த முத்துக்காளை 16ம் தேதி இரவு நிதி நிறுவனத்தினர் பூட்டிச் சென்ற பூட்டை உடைத்து வீட்டினுள் சென்று கதவை பூட்டி கொண்டார். உறவினர்கள் , பெற்றோர்கள் கதவை தட்டியும் திறக்கவில்லை. ஏன் கடனை திரும்ப செலுத்தவில்லை, சொந்தகாரர்கள் மத்தியில் அசிங்கப்படுத்தி விட்டீர்கள் என சப்தமிட்டபடியே வீட்டினுள் கதவை பூட்டி கொண்டு இருந்துள்ளார். சாப்பிடவும் வரவில்லை. நேற்று மதியம் மீண்டும் உறவினர்கள், பெற்றோர்கள் அழைத்த போது பதிலே சொல்லவில்லை. இதனையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்ற போது தனது தாயின் சேலையால் மின்விசிறி மாட்டும் கொக்கியில் து£க்கு போட்டு தற்கொலை செய்து இறந்து கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவனைக்கு கொண்டு சென்றும் டாக்டர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துவிட்டனர். இதுகுறித்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். தனியார் வங்கி நிர்வாகத்திடம் வாங்கிய கடனுக்கு மேல் வட்டி, அசல் திரும்ப செலுத்தியுள்ள நிலையில் மீண்டும் கடன¢ செலுத்த வேண்டும் என கெடுபிடி காட்டியதால் 19 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். கடன் கட்ட காலகெடு கேட்டும் தனியார் வங்கி அதிகாரிகள் அலட்சியம் காட்டியுள்ளனர். அன்றாடம் கூலி வேலை செய்யும் ஒரு குடும்பம் இளைஞரை இழந்து பரிதவித்து வருகிறது. வாழ வேண்டிய வயதில் வங்கி நிர்வாகம் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்து இளைஞர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.