பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை அடுத்த ஆனைமலை பகுதியில் மாசாணியம்மன் கோயில் அமைந்துள்ளது.இந்து சமய அறநிலை துறையின் கீழ் செயல்படும் இக்கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்துச் செல்கின்றனர்.நேர்த்தி கடனுக்காக மிளகாய் அரைத்து வழிபாடு செய்வது இக்கோயிலில் சிறப்பு அம்சமாகும்.இந்நிலையில் 14 வருடங்களுக்கு பிறகு ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதற்காக அம்மனுக்கு பாலாலயம் செய்யப்பட்டு,விழா ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.கும்பாபிஷேக விழாவிற்காக மதுரையில் இருந்து வந்த சிறப்பு குழுவினர் 52 கலசங்களை தயார் செய்தனர்.பிரத்தியேக கலசங்கள் ஊர்வலமாக பக்தர்களால் எடுத்து வரப்பட்டு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து யாக சாலைகள் அமைக்கப்பட்டு, ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து இசை கச்சேரி, பரதநாட்டியம், ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மாசாணி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து இக்கோயிலின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க, விண்ணை பிளக்கும் மந்திர உச்சாடனைகளோடு மாசாணி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, பக்தர்கள் மீது நீர் தெளிக்கப்பட்டது.பக்தர்களின் பாதுகாப்புக் கருதி 1100 காவல் துறை அதிகாரிகளும் 500 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு,தமிழக முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீஷ்வரன்,பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி,பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரர் சாமி,சூலூர் எம்எல்ஏ கந்தசாமி,ஆதீனங்கள் உள்ளிட்ட பலர் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.மூன்று லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசித்த னர் இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.