தமிழகத்தின் மேற்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான கும்மி ஆட்டத்தை மீட்டெடுக்கும் வகையில் கடந்த சில வருடங்களாக பல்வேறு குழுவினர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் கும்மி ஆட்ட கலையை கற்றுக் கொடுத்து அரங்கேற்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் , ஆண்கள் , பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் கும்மி ஆட்டத்தில் கலந்துகொண்டு பயின்று அரங்கேற்றங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் விஜயாபுரம் பகுதியில் நேற்று 5 ஆயிரம் கலைஞர்கள் கலந்து கொண்ட மாபெரும் கும்மி சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. பவளக்கொடி கும்மி ஆட்ட குழுவின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் 5 வயது சிறியவர்கள் முதல் 75 வயது ஆண் பெண் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஒரே சீருடை அணிந்து , தமிழ் வாழ்த்து , கடவுள் , இயற்கை சார்ந்த பாடல் மற்றும் இசைக்கேற்றவாறு நடனம் ஆடினர். திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் கலைஞர்கள் இணைந்து ஒரே நேரத்தில் கும்மி நடனம் ஆடியது இதுவே முதல் முறையாகும். இந்த மகா கும்மி சங்கமம் நிகழ்ச்சியை காண திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.