நாகர்கோவில்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மீனவ கிராமத்தில் ஓராண்டாக பயன்பாட்டில் இல்லாத வீடை இடித்த போது அங்கு  24 நல்ல பாம்பு குட்டிகளும்,7 முட்டைகளும் இருந்தால் அதிர்ச்சி. பாம்பு குட்டிகளை பிடித்து வனத்துறையினர் அடர்ந்த காட்டில் விட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பள்ளம்துறை லூர்து காலனியை சேர்ந்தவர் ரீகன் ( 30), மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் தற்போது தனது பழைய வீட்டின் அருகில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
இதற்காக ஓராண்டாக பயன்பாட்டில் இல்லாத பழைய வீட்டை இடித்து அகற்ற ரீகன் முடிவு செய்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை அகற்றும் பணி நேற்று நடந்தது. அப்போது ஒரு அறையில் இருந்த பீரோவை தூக்க முயன்றபோது அதன் அடியில் இருந்து ஒரு பெரிய நல்ல பாம்பு படம் எடுத்தபடி சீறிக்கொண்டு வெளியே வந்தது. இதனால் தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். தொடர்ந்து அந்த பாம்பு அங்கிருந்து தப்பி சென்றது. பின்னர் தொழிலாளர்கள் பீரோவை அகற்றினர். அப்போது அங்கு அவர்கள் கண்ட காட்சியால் அதிர்ச்சி அடைந்தனர். பீரோவின் அடியில் ஒரு பொந்தில் ஏராளமான பாம்பு குட்டிகள் குவியல் குவியலாக நெளிந்து கொண்டிருந்தன. பாம்பு குட்டி குவியலுக்கு இடையே முட்டைகளும் கிடந்தன.இதுகுறித்து பாம்பு பிடி வீரருக்கு  தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பொந்தின் உள்ளே இருந்த பாம்பு குட்டிகளை ஒவ்வொன்றாக வெளியே எடுத்தார். இதில் 24 நல்ல பாம்பு குட்டிகளும்,7 பாம்பு முட்டைகளும் இருந்தன. முட்டைகளை கையால் தொட்ட உடனே பொரிக்க தொடங்கின. தொடர்ந்து பாம்பு குட்டிகளையும், முட்டைகளையும் சுந்தர தாஸ் ஒரு பையில் அடைத்து வடசேரியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தார். வனத்துறையினர் அடர்ந்த காட்டில் பாம்புக்குட்டிகளை விட்டனர்.